பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்படும்
பவானிசாகர்   


 


பவானிசாகர் அணையில் நாளை முதல் 105 அடி நீர் தேக்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 


 

கடந்த 13 ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து  அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக 96 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 22 ம் தேதி 102 அடியை எட்டியது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையில் அக்டோபர் மாத இறுதி வரை 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கமுடியும் என்ற விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டது. நீர்வரத்து  குறைந்ததால் படிப்படியாக உபரிநீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டு கடந்த 25 ம் தேதி உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. 

 

இதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வரத்துக்கேற்றபடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.  இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 5885 கனஅடியாக உள்ளதால் பவானி ஆற்றில் விநாடிக்கு 4300 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1500 கனஅடி நீரும் என மொத்தம் 5800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.99 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டிஎம்சி யாகவும் உள்ளது. நவம்பர் 1 ம் தேதி முதல் அணையில் 105 அடிவரை நீர் தேக்கலாம் என்பதால் இன்றிரவு 12 மணி முதல் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்படும் எனவும் நீர்வரத்தை பொறுத்து அணையில் 105 அடி வரை நீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.