2022ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்: மத்திய அரசு

ரூ.1264 கோடி மதிப்பிலான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்


டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.

அதனையடுத்து, இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


ரூ.1264 கோடி மதிப்பிலான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.