தொடர் மழை காரணமாக தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கையின் காரணமாக உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு விரைகின்றனர்.
தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் மிதமான மழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், பழைய பெருங்களத்தூர், பாரதி நகர், வரதாஜபுரம் ஆகிய தாழ்வான பகுதிகளில் பெரிய கன மழைக்கு பிறகு வெள்ளநீர் தேங்குவது வழக்கம். ஆனால் 3 நாட்களிலேயே அப்பகுதியில் பெருமளவு தண்ணீர் தேங்கியிருப்பது அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.
இதனால் குடியிருப்பில் வசித்து வரும் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி செல்கின்றனர். இதற்காக காற்று நிரப்பப்பட்ட டியூப் மூலம் படகு செய்யப்பட்டு அதில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அமரவைத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை அப்பகுதி இளைஞர்களே செய்து வருகின்றனர்.