திருவள்ளூர், ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை

சென்னை:

மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் டெல்லியில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-


சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு திருவள்ளூர், ஆவடி மார்க்கமாக 30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலும், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. மேலும் சென்டிரலுக்கு வரும் பயணிகள் தங்கள் வீடுகளை சென்றடைய குறைந்த பட்சம் 2 மணி நேரமாகின்றது.

எனவே, பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு தினமும் சென்னை சென்டிரலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவள்ளூர் மற்றும் ஆவடி ரெயில் நிலையங்களில் 2 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்வதன் மூலம் பயணிகளின் பயண நேரத்தை குறைப்பது மட்டுமின்றி சென்டிரல் ரெயில் நிலையத்தில் தினமும் ஏற்படக்கூடிய பயணிகளின் நெரிசலையும் குறைக்க வழிவகுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.